×

முதல்வர் அளித்த பதிலுரையை கொஞ்சம் கவனித்திருந்தால் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக்கான உத்திகள் தெரிந்திருக்கும்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

சென்னை: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலுரையை கொஞ்சமாவது கவனித்திருந்தால் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக்கான உத்திகள் என்னென்ன என்பது தெரிந்திருக்கும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி அளித்துள்ளார். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளர், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்ட அறிக்கை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்த பிறகு வெளியே செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. ‘’ஒரு டிரிலியன் டாலர் பொருளாதார வளர்ச்சி என்றார்கள். அதற்காக என்ன உத்திகள் கடைப்பிடிக்கப்படுகின்றன எனச் சொல்லவில்லை’’ எனப் புலம்பியிருக்கிறார். ‘’தமிழ்நாட்டை 2030ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை வைத்துச் செயல்படுகிறோம்’’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அந்த இலக்கை எட்ட தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் அளித்த பதிலுரையைக் கொஞ்சமாவது கவனித்திருந்தால் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக்கான உத்திகள் என்னென்ன? என்பது அவருக்குத் தெரிந்திருக்கும். இந்தியாவின் பொருளாதார வளத்திற்கு 9% பங்கைத் தருகிறது தமிழ்நாடு. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது இடம். ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி 7.24% என்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சி 8.19%. இந்தியாவின் பணவீக்கம் 6.65%. ஆனால், தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.97% ஆகக் குறைந்துவிட்டது.

தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாடு 3-வது இடத்துக்கு உயர்த்தப்பட்டது. இப்படி பட்டியல் போட்டுச் சொல்லியிருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். இவைதான் ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் செல்லும் உத்திகள். இலக்கை நோக்கி வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருப்பதற்கான சான்றுகள். இதனை எதிர்க்கட்சித் தலைவர் புத்தியில் ஏற்றிக் கொள்ளட்டும். ’’தேர்தல் அறிக்கையில் சொன்ன அறிவிப்புகளில் 10% மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நிறைவேற்ற முடியாத கவர்ச்சிகரமான அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் சொல்லி மக்களை ஏமாற்றியிருக்கிறீர்கள்’’ எனச் சொல்லியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.

சட்டமன்றத் தேர்தலின்போது மக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகளை நிறைவேற்றிய விவரத்தை 2022 மார்ச்சில் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதன்பிறகும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆட்சிக்கு வந்த உடனேயே 505 வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட வேண்டும் என யாராவது கேட்பார்களா? அது சாத்தியமா? ஐந்து ஆண்டு ஆட்சிக் காலத்தில்தான் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி இருக்கிறது. படிப்படியாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றும்.

‘அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச செல்போன், இலவச செட்டாப் பாக்ஸ், ஒவ்வொரு குடும்பத்துக்கும் நாளொன்று 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட அம்மா குடிநீர், அம்பேத்கர் அறக்கட்டளை என அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் நீங்கள் நிறைவேற்றிவிட்டீர்களா? ஊரக வேலைவாய்ப்பு 100 நாளில் இருந்து 150 நாட்களாக உயர்த்துதல், சேது சமுத்திரத் திட்டம், நீட் தேர்வு ரத்து போன்ற வாக்குறுதிகள் எல்லாம் என்னாச்சு என கேள்வி எழுப்பியிருக்கிறார். இவையெல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டியில் உள்ளவை. நிதிப் பகிர்வு முதல் திட்டங்கள் வரை ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.

The post முதல்வர் அளித்த பதிலுரையை கொஞ்சம் கவனித்திருந்தால் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக்கான உத்திகள் தெரிந்திருக்கும்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி appeared first on Dinakaran.

Tags : Minister ,Raghupathi ,Edappadi Palaniswami ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Pudukottai South District ,DMK ,Dinakaran ,
× RELATED அடுத்தது செங்கோட்டையனா? எஸ்.பி...